மானிய விலையில் மண்ணெண்ணெய் வாங்கியதில் கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதில், போலீசின் கண்ணில் சிக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், தற்பொழுதுது மீனவர் விடுதலை இயக்க தலைவராக உள்ளவர். நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த மரியராஜ் மகன் அந்தோணிராய். இவர் 2013 - 2015-ம் ஆண்டுகளில் உவரி மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகித்து வந்த பொழுது படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வாங்கியதில் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ 10 லட்சத்து 85 ஆயிரத்து 82 தொகை செலுத்த வேண்டியிருந்தது. இத்தொகையினை செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாக அப்போதைய மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன் வணிகவியல் நெல்லை மாவட்ட காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட அந்தோனிராய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த உவரி மீனவர் கூட்டுறவு சங்க எழுத்தர் தூத்துக்குடி மாவட்டம் இடையன்குடியை சேர்ந்த ஞான ராஜதுரை ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்புலனாய்வு துறையினர் தேடி வந்த நிலையில், 2015ம் ஆண்டே ஞான ராஜதுரையை கைது செய்த போலீசார் சங்கத்தலைவரான அந்தோனிராயை தேடி வந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக வசித்து வந்த அந்தோனிராய் முன்தினம் நெல்லை பாலிடெக்னிக் அருகில் நின்று கொண்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து போலீசார் கைது செய்து நெல்லை மாவட்ட குற்றவியல் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கடற்கரை செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். முன்னதாக தலைமறைவாக இருந்த அந்தோனிராயை கைது செய்வதற்காக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.