விருதுநகரை அடுத்துள்ள பாவாலி கிராமத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பரப்புரை செய்தபோது, கூட்டம் சேர்ப்பதற்கு ஆள் கிடைக்காத நிலையில், பள்ளி மாணவ மாணவியர் கையில் பாஜக கொடியைப் பிடிக்க வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டிடத்தின் மேற்பகுதியில் பள்ளி மாணவர்களை அமர வைத்திருந்தது, நடுநிலையாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
பிரச்சாரத்தில் ராதிகா சரத்குமார் "அதிமுக யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. மத்தியில் யாருடனும் கூட்டணியில் இல்லை. இங்கே அதிமுக எதிர்க்கட்சி. ஒரு பொன்னான வெற்றியை எனக்குக் கொடுத்து, உங்கள் பிரதிநிதியாக என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவையுங்கள். நான் ஒரு நல்ல பாலமாக உங்களுக்கு இருப்பேன். அடுத்து பாஜக கட்சிதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற முடிவுக்கு நாடே வந்துவிட்டது.
பத்தாண்டு காலமாக ஊழல் இல்லாத ஒரு ஆட்சியைக் கொடுத்திருக்கிறார் பிரதமர். திமுக கூட்டணியினர் பொய்ப்பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளைத் தந்தார்கள். விருதுநகரில் எனக்கு வீடு இருக்கிறது. இங்கிருந்து சிறப்பாகச் செயல்படுவேன். முதல்முறையாக நானே போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களியுங்கள்” என்று ஆதரவு திரட்டினார்.