சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48ஆவது சென்னைப் புத்தகக்காட்சி கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக்காட்சி ஜனவரி 12ஆம் தேதி (12.01.2025) வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் எனவும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தகங்களை வாங்க, பொதுமக்கள் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சீமான் உள்ளிட்ட பலரும் எழுந்து நின்றவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ பாடலுக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒன்று பாடப்பட்டது.
தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் எனக் குறிப்பிட்டு வேறு ஒரு பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட பாரதிதாசனின் பாடல், புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடநல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீமான் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.