![Continuing raid ... AIADMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/4rOgiaW2ReJgNwSeNgnf9b90_bwujeCoigMGBkaq35I/1634543562/sites/default/files/inline-images/z26_13.jpg)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை வந்த விஜயபாஸ்கர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடும்பத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
![Continuing raid ... AIADMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/p9iQMagAeuJfxmHZ-YtxqWBR385kz2GPBc-GXkfoGDk/1634543618/sites/default/files/inline-images/TUTRU.jpg)
இந்நிலையில், கீழ்ப்பாக்கத்தில் சோதனை நடைபெற்றுவரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பாக அதிமுக தொண்டர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சென்னையிலுள்ள மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், ராஜேஷ், பாலகங்கா ஆகியோர் கீழ்ப்பாக்கம் வந்துள்ளனர்.