மனித சமூகத்திற்கு இந்த வடிவில் பேராபத்து வரும் என்று எந்த ஜாதக பலனோ அல்லது நவீன விஞ்ஞானமோ முன்கூட்டியே கணித்து கூறவில்லை. உலகத்தின் இயக்கத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்து விட்டது கொடிய கரோனா வைரஸ் தொற்று. நாட்கள் கடந்து மாதங்களும் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் மருத்துவ உலகம் கரோனாவை கொல்ல முடியாமல் போராடுகிறது. அந்த கரோனாவால் பாதிப்பும், மரணங்களும்தான் கூடி வருகிறது.
இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் அப்பாவி ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களை அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவதியுற வைத்து வருகிறது. எத்தனையோ ஆயிரம் கோடி என்றெல்லாம் அறிவிப்பு வருகிறது ஆனால் வெறும் ஆயிரம் ரூபாயைத்தான் இந்த நான்கு மாதத்தில் மக்களுக்கு அரசு கண்ணில் காட்டியது. தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுக தொடங்கி அனைத்து கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் "ஐயா ஆட்சியாளர்களே மக்கள் கையில் பணமாக கொடுங்கள் குறைந்த பட்சம் பத்தாயிரம் அல்லது ஏழாயிரத்து ஐநூறு ரூபாயாகவாது கொடுங்கள்" என அறிக்கைகளால் அறைகூவல் விட்டும் பணிந்து கேட்டும் பார்த்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லை.
அதற்காக விட்டு விட முடியுமா? இந்திய அளவில் இப்போதும் மக்களுக்கான போராட்டத்தில் முன் களத்தில் இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே என்பதை அக்கட்சியினர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். சென்ற 16 ந் தேதி நாடு முழுக்க அந்தந்த ஊர்களில் கட்சித் தோழர்கள் இருக்கும் இடத்திலிருந்தே மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பல ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்பாட்டம் செய்தார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து 20 ந் தேதி சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியா முழுக்க ஒவ்வொரு பெருநகரம் முதல் கிராமங்கள் வரை கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தும் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழகம் முழுக்க எழுச்சியோடு நடந்த இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் பவானியில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தலைமை வகித்து நடத்தினார் பிறகு அவர் நம்மிடம் பேசும் போது, "வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை வந்தாலும் மக்களுக்கான குரல் கொடுப்பதில் கம்யூனிஸ்டுகள் வீட்டுக்குள் இருந்தும் இந்த செவிட்டு அரசுகளின் காதில் விழும் அளவுக்கு கோஷம் எழுப்புவோம். இந்த கரோனா காலத்திலும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஏழை எளிய மக்களை வஞ்சித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்பது தொடர்ந்து ஏறிக்கொண்டே உள்ளது. இதன் விளைவு விலைவாசி ஏற்றம் உட்பட சாதாரண மக்களைதான் பாதிக்கிறது. அதேபோல்தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதை கண்டித்தும் இந்த ஊரடங்கு முடக்க காலத்திலல் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு கையில் பணமாக கொடுக்க வேண்டும் என்றும் அது குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால்தான் அவர்களுக்கு உதவும். அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்கள் பல கோடி பேர் இந்தியாவில் உள்ளார்கள் அவர்களுக்கு நிவாரண நிதியும் உதவியும் அரசு வழங்க வேண்டும்.
பிழைப்புக்காக பல்வேறு ஊர்களுக்கு பல மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை அரசு கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் இப்படி பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கும் அளவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியா முழுக்க இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்பெல்லாம் மாவட்டத்தில் ஒரு இடம் என ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இப்போது தோழர்கள் குடியிருக்கிற ஒவ்வொரு கிராமத்திலும் கூட இந்த அரசை கண்டித்தும் வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இது போராட்டத்தில் ஒரு புதிய வடிவம்தான். இந்தியாவில் பிரதான கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை பல்வேறு இயக்கங்கள் உள்ளது. இந்தக் காலத்தில் போராட்டம் என்பது சொல்லும்படி எதுவும் இல்லை ஆனால் எந்த காலத்திலும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் போராடுவோம் போராடிக்கொண்டே இருப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம். இதன் தொடர்ச்சிதான் இந்தப் போராட்டமும்" என்றார்.
முன்பெல்லாம் மிகப்பெரிய பேரணி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட மாநாடு என்று நமது சமகாலத்தில் பார்த்துவந்த அரசியல் இயக்கங்களின் செயல்பாடு இப்போது இருக்கும் இடத்திலிருந்து உரிமைக்கான குரலை கொடுக்கும் சூழலுக்கு வந்துள்ளது.