தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாத நபர்கள் மத்தியரசின் கிஸான் திட்டத்தில், போலியான விவசாயிகளை சேர்த்து ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிதி பெற்றுள்ளனர். இப்படி ஆயிரக்கணக்கான போலி விவசாயிகளை இணைத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்த திட்டத்தில் மோசடி நடத்தியுள்ளனர். இந்த மோசடியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள், தற்காலிக பணியாளர்கள், கணிப்பொறி மையத்தினர், பெண்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த மோசடி தமிழகத்தில் வெளிவந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 3,242 பேர் விவசாயிகள் என பதிவு செய்து மோசடி செய்துள்ளனர். இவர்கள் மோசடி செய்த தொகை ரூ.1 கோடியே 23 லட்சம். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,687 பேர் முறைகேடாக போலி விவசாயிகள் பெயரில் 80 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி முறைகேடு செய்துயிருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் கணினி மைய உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட ஜோலார்பேட்டையை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாகவுள்ள கண்மணி, ஜோலார்பேட்டையில் கணினி மையம் வைத்துள்ள ஜெகன்நாதனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.