இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் என்பது தொடர் சம்பவமாகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் தாக்குதல் சம்பவம் நடக்கும் போது இனி நடக்காது என்று சொல்வதையே வழக்கமாகவே உள்ளது. கடலுக்கு போகும் மீனவர்கள் சேதாரமின்றி திரும்பி வர வேண்டும் என்று பெண்கள் கரையில் காத்திருப்பார்கள்.

இந்த நிலையில் தான் 29.06.2019 ஆம் தேதி காலை சுமார் 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்குத் தளத்திலிருந்து ஜெதாப்பட்டிணம் கலைவாணன் (50), என்பவருக்குச் சொந்தமான IND TN 08 MM 399 என்ற பதிவு எண் கொண்ட விசை படகில் மீனவர்கள் கார்த்திக் (25), குட்டியாண்டி (25), ராசு (65), மனோகர் (எ)வழிவிட்டான் , ஆனந்த் (48) ஆகியோர் ஆழ கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சர்வதேச எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு விசைப்படகு சேதமடைந்தது. இதில் விசைப்படகின் வலது முன்பக்கம் சேதமானது.

அதனைத் தொடர்ந்து மீனவர்களின் வலைகளும் இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் படகில் இருந்த 5 மீனவர்களும் அதே படகில் தப்பி வந்துள்ளனர். இதில் குட்டியாண்டி என்வரைத் தவிர மீதமுள்ள 4 மீனவர்களும் காயத்துடன் மணமேல் குடி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர். மத்திய அரசு தமிழக மீனவர்கள் அடிபடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.