Skip to main content

தனியார் பாலில் கலப்படம்! அமைச்சர் பேச இனி தடையில்லை! -உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாகப் பேசக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தனியார் பால் நிறுவனங்களின் பால்  தரம் குறைந்து உள்ளதாகவும், இதைக் குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும்  தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி 2017 -ஆம் ஆண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். 

 

balaji


 
தங்கள் நிறுவனங்கள் குறித்துப் பேச அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரியும்  ஹட்சன், டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 

 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன், ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசக் கூடாது என தடை விதித்தார். மேலும்,  மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட பால் நிறுவனமே , அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில்  ஆய்வு செய்து,  அது தொடர்பான அறிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்  கே.டி.ராஜந்திரபாலாஜி  மேல்முறையீடு செய்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில்  ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளிவராது என்றும், பால்வளத்துறையின் அமைச்சர் என்ற முறையில்,  தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில்  தனியார் பால் நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிடாமல் கருத்து  தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என்று பிறப்பித்த உத்தரவானது, ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தனது பேச்சுரிமையைப் பாதிப்பதால்  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில்  குறிப்பிட்டிருந்தார். 

 

சென்னையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு. மேலும் அமைச்சரின் பேச்சால் தனியார் பால் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதனால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்