இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளுக்கே நேரில் சென்று நோயாளிகள் ஆக்சிஜன் பெற்று வரும் நிலையை நம்மால் காண முடிகிறது. இது காண்போரின் கண்களைக் கலங்க வைக்கிறது.
மற்றொருபுறம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மோடி பத்து வருடங்கள் கேட்டார். ஆனால் அவரால் என்ன சாதிக்க முடியும் என்பதை 7 வருடங்களிலேயே நிரூபித்துவிட்டார். மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு. நாம் இந்தக் கரோனா போரை ஒருவருக்கொருவர் ஒற்றுமை, அன்பு, கனிவுடன் கடப்போம்.
ஆர்எஸ்எஸ், பிஜேபி விதைத்த வெறுப்பையும் பிரிவினையையும் மண்ணில் புதைப்போம். கரோனாவை விட கொடிய இந்த அரசின் ஆணவத்தால் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் இல்லாமல் மதவேறுபாடு இல்லாமல் மக்கள் செத்து மடிகிறார்கள். இந்த வெறுப்பு, பிரிவினை அரசியல் நமக்கு கொடுத்த பரிசு இதுதான். மனிதம் காப்போம்." இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.