காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.வினர் முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஜார்கண்டின் அண்டை மாநிலமான மேற்கு வங்கம் மாநிலம், ஹவுரா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கியது. காரில் இருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்களை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான இர்பான் அன்சாரி (Irfan Ansari), ராஜேஷ் கச்சப் (Rajesh Kachhap), நமன் பிக்சால் (Naman Bixal) என்பது தெரிய வந்தது.
தாங்கள் கொண்டு வந்த பணம் தொடர்பாக, முறையான தகவலைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கூறவில்லை என்றும், மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
காரில் கட்டுக்கட்டாகப் பணத்துடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கியது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், "மகாராஷ்டிரா போன்று ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் சிபுசோரன் தலைமையிலான கட்சி காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.