தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, மூன்றாவது நாளான இன்று (25/01/2021) கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி எம்.பி., "இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை மூன்று கார்ப்பரேட் முதலாளிகளிடம் பிரதமர் கொடுத்துவிட்டார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடிதான் காரணம்" என்றார்.
ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரூரை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ராகுல்காந்தி, தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (25/01/2021) மாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.