அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி இந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், நாகை மாவட்டம் கல்லார் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய நிலையில், திடீரென திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற நிர்வாகி கடலில் பத்தடி ஆழத்திற்குச் சென்று தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.