திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த மாதம் 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் பல இடங்களிலும் தேடியும்கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் 23.05.2024 காலை சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி வசம் வழக்கு மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவர் உயிரிழந்து கிடந்த தோட்டத்தில் கிணறு, மோட்டார் ரூம் மற்றும் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் இன்று சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ரமணன், ஐ.ஜி அன்பு எஸ்.பி முத்தரசி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது. மொத்தம் இரண்டரை ஏக்கர் கொண்ட அந்தத் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறை, கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்திற்கு அருகே இருக்கக்கூடிய வீட்டில் உள்ள அவருடைய மகன் கருணையா ஜப்ரினையும் அழைத்து அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.