வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக அஸ்ஸாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பெருமாள்பேட்டையில் அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் ஆகஸ்ட் 16ந்தேதி மதியம் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடித்துக்கொண்டுள்ளனர். சிலர் அருவாளோடு மோதிக்கொள்ள முயன்றுள்ளனர். அந்த இருதரப்பையும் விலக்கிவிட்டு பார்த்திபன் சமாதானம் செய்து விலக்கி விட்டு அனுப்பியுள்ளார்.

இரவு கோயில் அருகே திருவிழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்று கொண்டுயிருந்தது. அப்போது பார்த்திபன் நண்பர்களுடன் சேர்ந்து அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டடு இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜவகர், முருகன், குணா ஆகியோர் கொண்ட கும்பல், அவனுங்களுக்கு சாதகமாவாடா பேசற என அரிவாளால் பார்த்திபனுடன் சண்டை போட்டுள்ளனர்.
அப்போது அந்த கும்பல் மறைத்துவைத்திருந்த அரிவாளால் பார்த்திபனை வெட்டி கொலை செய்ய திட்டமிட்டு அருவாளை வீசியுள்ளான் ஒருவன். அதை கைகளால் தடுக்க முயன்றபோது இடது கை மணிக்கட்டு வரை துண்டாகி கீழே விழுந்துள்ளது. அவர் அலற வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


இதை பார்த்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனையும், துண்டான கையையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கையை இணைக்க பார்த்திபனை மேல் சிகிச்சைகாக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கையை வெட்டி தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். யார் என தெரிந்தும் ஆகஸ்ட் 17ந்தேதி வரை ஒருவரையும் போலிஸார் கைது செய்யவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர்