நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றகிளை உத்தரவிட்டுள்ளது
திருநெல்வேலி திசையன்விளையை சேர்ந்த ராக்கெட் ராஜா என்ற ஆறுமுக பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அதில், " பாளையங்கோட்டையை சேர்ந்த பேராசிரியர் செந்தில் குமார், வக்கீல் பாலகணேசன்,டாக்டர் பாலமுருகன் ஆகியோருக்கு இடையே இருந்த இடபிரச்சனை முன்விரோதம் காரணமாக செந்தில்குமாரை பிப்ரவரி 26 ஆம் தேதி அவரது வீட்டிலேயே வைத்து சிலர் கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரி காவல் நிலைய போலீசார் என்மீது வழக்குபதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர். எனக்கும் இந்த கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறி இந்த வழக்கில் ஜாமீன் வழங்ககோரி 12.6.2018 அன்று நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
ஆனால் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் என்னுடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்நிலையில் நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை செய்யபட்ட வழக்கில் எனது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்த நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ராக்கெட் ராஜா தினமும் காலை,மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.