தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 25 ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் எனக்கூறியுள்ளது தமுமுக தலைமை. இதனை தொடர்ந்து தமுமுகவினர் பல்வேறு நலப்பணிகளோடு 25 ஆவது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாட தொடங்கியுள்ளார்கள்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர தமுமுகவின் மருத்துவசேவை அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் அக்டோபர் 13ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் தமுமுக மாவட்ட தலைவர் நசீர் அஹமத் ரத்ததானம் வழங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வந்துயிருந்த ஆம்பூா் நகர காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன், ரத்ததானம் செய்வது என்பது தானம் செய்பவரின் உடல் நலனுக்கு நலம் பயக்கும், அதேபோல் ரத்ததானம் தரும்போது யாரென்றே தெரியாத ஒருவரின் உயிரை நாம் காப்பாற்றியதாக இருக்கும், அதனால் ரத்ததானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த முகாமில் 75 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். தமுமுக என்கிற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் இந்து இளைஞர்கள் பலரும் கலந்துக்கொண்டு ரத்ததானம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.