ஒய்வு பெற்ற பிறகும் அரசிடமிருந்து சட்டப்படி முறையாக வரவேண்டிய சலுகைகளைக் கேட்டு போராட்டத்தை ஒய்வில்லாமல் நடத்த வேண்டி இருக்கிறது எனக் குமுறுகிறார்கள் அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள்.
ஈரோடு மாவட்ட அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக (01.10.20) இன்று ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள டெலிஃபோன் பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் குப்புசாமி, போக்குவரத்து துறை ஓய்வூதிய சங்க லோகநாதன், அகில இந்திய பி.எஸ்.என்.எல், டி.ஓ.சி மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"ஓய்வூதியர்களுக்கு மருத்துவ சலுகைகள் வழங்க வேண்டும். உள்நோயாளியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு அதற்கான தொகையை அரசு வழங்க வேண்டும். ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக் கட்டணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும், பென்சன் உட்பட பணப் பலன்களில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும்" எனப் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இன்று உலக முதியோர் மற்றும் உலக ஓய்வூதியர் தினம்!