வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் விவசாய நிலத்தில் சில இளைஞர்கள் ஒன்று கூடி போதை ஊசி, மாத்திரைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் தட்டப்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட குடியாத்தம் தாலுகா போலீசார் தட்டப்பாறை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 17 வயது சிறுவனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சிலரையும் குடியாத்தம் தேடி வருகின்றனர்.
அங்கிருந்த சில ஊசிகள் மற்றும் மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் போதை ஊசி பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கமல்ராஜ், மாரியம்மன் பட்டி கிராமத்தைச் சார்ந்த விக்னேஷ், சென்னையைச் சார்ந்த ஷாம், சாரதி என்கிற ஐந்து பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் 17 வயதான ஒரு சிறுவன் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் போதை மருந்துகளை வாங்கி ஊசி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உடம்பில் செலுத்துகின்றனர். இந்த 5 பேரில் சென்னை சேர்ந்த இருவர் இதே போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் வேலூர் அடுத்த பாகாயத்திலும் போதை மருந்து ஊசி விற்பனை செய்தது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் இளைஞர்களுக்குப் போதை மருந்துகளையும், போதை ஊசிகளையும் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.