திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ள இளங்கலை முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் என மொத்தம் 520 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை கவுன்சிலின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி கலந்து கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவிகளுக்கான பட்டத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வம், பதிவாளர் காளிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த விழாவில் இன்பராஜ் என்பவர் முனைவர் பட்டத்தினை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பெற்றுக் கொண்டார். ஆளுநர் அருகில் சென்றபோது தான் வைத்திருந்த மனுவை ஆளுநரிடம் வழங்கினார்.
அந்த மனு குறித்துப் பேசிய இன்பராஜ், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை படிப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். எந்தவித காரணமுமின்றி ஆராய்ச்சி படிபிற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களை மதிப்பதில்லை, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதில்லை. இதனால் பலர் பல்வேறு வகையான இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஆராய்ச்சி படிப்பு தொடர்பாக பல்கலைக்கழகத்திற்கு வருபவர்கள் ஒரு நாள் முழுக்க காக்க வைக்கப்படுகின்றனர். விரைவாக முனைவர் பட்டம் கிடைத்தால் தான் அடுத்தடுத்து அவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும். ஆனால் எந்தவித காரணமும் இன்றி பட்டம் வழங்குவது காலம் தாழ்த்தப்படுவதால் பலர் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். தற்பொழுது முனைவர் பட்டம் பெற்றவர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து தான் பட்டம் பெற்றுதாக கூறுகின்றனர். தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் இது குறித்து யாரும் வெளியே கூறுவதில்லை.
எனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தேன். ஆளுநர் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு முனைவர் பட்டம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.