Skip to main content

“பத்திரிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்போம்” - அமைச்சர் மதிவேந்தன்!

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
Minister Madivendan says Lets give priority to journalists 

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா நேற்று (29.10.2024) மாலை மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள், கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த நிருபரான கங்காதரனுக்கு சங்கத்தின் சார்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நினைவு பரிசு மற்றும் காசோலை கொடுத்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 2024ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட நடிகர் ஹரிஷ் கல்யாண் பெற்றுக் கொண்டார்.

Minister Madivendan says Lets give priority to journalists 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தம்பி ஹரிஷ் கல்யாண்க்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இதற்கு முன்பு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். இப்போது போங்கள் நான் தீபாவளிக்கு கலந்து கொள்கிறேன் எனக் கூறியிருந்தேன். ஏனெனில் மூன்றாவது முறையாக ஒரு துறைக்கு பொறுப்பு கொடுத்து என்னை திமுக அமர்த்தி இருக்கிறது. இதற்கு முன்பு சுற்றுலாத்துறை, அடுத்து வனத்துறை, தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாழ்வுத்துறையைக் கவனித்து வருகிறேன். அதனாலயே பொறுப்புகளுக்கு மரியாதை கொடுத்து தொடர்ந்து பணியாற்றும் நிலை இருக்கிறது. எனவேதான் தீபாவளிக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தேன். ஆதனால் தவறாமல் இந்த தீபாவளிக்கு என்னை அழைத்தார் கவிதா.

நிரந்தர தலைவியாக ஒருவர் இத்தனை காலமும் ஒரு சங்கத்தை வழிநடத்திச் செல்வது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் உறுப்பினர்களான நீங்கள் தொடர்ந்து ஒருவரை முன்னிறுத்தி அவரையே தலைவியாக ஏற்றுக் கொண்டு சங்கத்தை திறம்பட செயல்படுத்துகிறீர்கள் எனில் அதுவே அவரது கடின உழைப்பை காட்டுகிறது. பத்திரிகையாளர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல. வெயில், மழை எதையும் பாராமல் கொரோனா போன்ற உயிருக்கே ஆபத்தான நிலையிலும் கூட தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்கள். அவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னதான் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தொடர்ந்து எல்லா படங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

Minister Madivendan says Lets give priority to journalists 

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன். ஒழுக்கமும், கடின உழைப்பும் இருந்தால் ஒரு துறையில் சரியான இடத்தைப் பிடித்து உயரலாம் என இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். உங்களின் அத்தனை படங்களும் பார்த்திருக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து மிகவும் அற்புதமாக நடித்து வருகிறீர்கள். நீங்கள் சினிமாத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பத்திரிகையாளர்கள் நிகழ்வு என்றவுடன் நிச்சயமாக எப்படியாவது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டு விட்டேன். காரணம் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் எப்போதும் தன்னை திமுக தலைவர் என்பதற்கு முன், தன்னை முதலில் பத்திரிகையாளர் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வார். அவர் வழித்தோன்றல்களான நாங்களும் நிச்சயம் பத்திரிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்போம்.

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்' என வாழ்த்தினார். அதோடு நிருபர்களின் சில கேள்விகளுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும் கலகலப்பாகவும் பேசி தனது உரையை நிறைவு செய்தார் அமைச்சர் மதிவேந்தன். இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைச்சர் மதிவேந்தன், திருமண நாள் கொண்டாடும் நடிகர் ஹரிஷ் கல்யாண்க்கு பட்டாடைகளை, பரிசு கொடுத்து மேடையில் சிறப்பு சேர்த்தார். மேலும் தீபாவளி மலர், சிறப்பாக உருவாகக் காரணமாக இருந்த உறுப்பினர்களுக்கும் மற்றும் விளம்பரங்கள் பெற்றுத் தந்த உறுப்பினர்களுக்கும் அமைச்சர் கையால் கௌரவிக்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக, சங்க உறுப்பினர்களுக்கு  நல்லெண்ணை முதல் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வரை 8 பொருட்கள் அடங்கிய, தீபாவளி பரிசுத்தொகுப்பு கொடுக்கப்பட்டு, இரவு உணவோடு விழா நிறைவுற்றது.

சார்ந்த செய்திகள்