
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் புரளி என்று கண்டயறிப்பட்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களின் பயண அட்டவணை மாற்றம், விமான ரத்து என விமான சேவைகள் பலவகைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், விமான பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், பயணிகள் மத்தியில் பீதியையும் உருவாக்கியுள்ளது.
அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். அதோடு விமான நிலையங்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகள், தகவல்களை சமூக வலைத்தளங்கள் உடனே நீக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 8 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 3 இண்டிகோ விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன.
அதாவது சென்னையில் இருந்து இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கோவா, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களுக்குச் செல்ல இருந்தன. இத்தகவல் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு இன்று மாலை வந்த மிரட்டலையடுத்து விமானங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வெடி குண்டு மிரட்டலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் புரளி எனத் தெரியவந்ததையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த மிரட்டல் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.