தனியார் தொலைக்காட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘காட் மேன்’ வெப் சீரியஸில் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளது. ஆகவே சீரியஸை வெளியிடப்படக்கூடாது என பிராமணர் சமூகம் போராட்டத்தில் இறங்கியது.
இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் அதன் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் சில நிர்வாகிகள் நேரில் வந்து போலீஸ் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது,
"தமிழில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள காட் மேன் என்கிற வெப் சீரியஸ் வருகிற 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது அதில் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான சில காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த டீஸரிலேயே இவ்வாறு இருக்கிறதென்றால் அந்த முழு படமும் எவ்வாறு இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை. அந்த காட்சிகளும், வசனங்களும் எங்களையெல்லாம் மிகவும் புண்படுத்தி உள்ளது. எல்லாமே நகைச்சுவை, புதுமை என்ற பெயரில் திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியஸிலும்கூட இவ்வாறு செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்.
இது வெப் சீரிஸ் என்பதால் இதற்கு அரசின் சென்சார் போர்டு கட்டுப்பாடுகள் இருக்காது. ஆகவே எங்கள் சமூகத்தினருக்கு அந்த முழு வெப் சீரியஸையும் திரையிட்டு எங்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே அதை வெளியிட வேண்டும். அதுவரை அந்த காட் மேன் வெப் சீரியஸை வெளியிட தடை விதிக்க வேண்டும். காவல்துறைதான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர்கள் கூறினார்கள்.
இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் இந்து அமைப்புகளின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காட் மேன் சீரியஸை தற்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை என அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.