பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அதிமுகவில் அண்ணாவின் படத்தையும், பெரியார் படத்தையும் நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று கட்சி பெயரை மாற்றி அரசியல் செய்தால் தமிழகத்தில் அதிமுகவிற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது இருக்கும்” என்றபடி பேசியிருந்தார்.
இதற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எஸ்.வி. சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று கூட தெரியாது, அவர் நினைத்ததையெல்லாம் பேசுவார் ஆனால் வழக்குகள் வந்தால் ஒளிந்து கொள்வார் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் அதிமுகவின் மற்ற அமைச்சர்களும் எஸ்.வி. சேகர் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியிருந்தனர். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு படி மேலே போய் மானம், ரோசம் இருந்தால் அதிமுகவில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்தபொழுது பெற்ற சம்பளத்தையும், தற்போது பெறும் பென்ஷனையும் திருப்பி தர முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முதலமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியையும், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களாக அதிமுகவிற்கும், எஸ்.வி. சேகருக்கும் இடையே நடந்துவந்த வார்த்தை போர்களுக்கு அடுத்து தற்பொழுது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.