விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத; வேலையின்மைக்குத் தீர்வு காணாத; சுயநல ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்துகின்ற; ஊழல் பெருக்கெடுத்து முடைநாற்றம் வீசுகிற; தமிழைப் பழித்து இந்தியைத் திணிக்கின்ற; விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு எதிராகச் செயல்படுகின்ற மோடி தலைமையிலான பாஜக அரசே ஆட்சியை விட்டு வெளியேறு! எனும் முழக்கத்தை முன்வைத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (12.09.2023) முதல் மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.
விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை தலைநகர் சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பெண்கள் உள்பட 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். சென்னையில் பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், வட சென்னை மாவட்டச் செயலாளர் த.கு. வெங்கடேச வேம்புலி ஆகியோர் தலைமை தாங்கினர்.
தாராபுரம் நகரில் நடந்த மறியல் போராட்டத்திற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் டி. ராமச்சந்திரன், கும்பகோணம் நகரில் முன்னாள் எம்.எல்.ஏ. வை. சிவபுண்ணியம், சத்தியமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல். சுந்தரம், கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ. எம். ஆறுமுகம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஜி. பழனிசாமி, கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஊராட்சித் தலைவர் அ. பாஸ்கர் ஆகியோர் மறியலில் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நடந்த மறியலில், முன்னாள் எம்.எல்.ஏ. பி. பத்மாவதி, திருநெல்வேலியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி. கிருஷ்ணன் உட்படக் கட்சியின் முன்னணி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் மறியலில் பங்கேற்றுக் கொண்டனர். மறியலில் கலந்து கொண்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுதலை செய்துள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் (13.09.2023 மற்றும் 14.09.2023) வட்ட, வட்டார மையங்களில் தொடர் மறியல் போராட்டம் தொடர்கிறது. சென்னை குறளகத்தின் அருகில் உள்ள தொலைப்பேசி நிலையம் முன்பும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறும் மறியல் போராட்டத்தை அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.