தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு. இதையடுத்து நேற்று தூத்துக்குடி சென்று அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அங்கு துப்பாக்கி சூட்டிலும், தடியடியிலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிலர், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் எங்களை போலீசார் கைது செய்வதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன், “நீங்கள் அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும். பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு பூரண உடல் நலம் பெற வேண்டும். அனைவருக்கும் 10 நாட்களில் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்படும். அப்போது கடற்கரை ரோட்டில் உள்ள சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்துக்கு வந்து விவரங்களை தெரிவிக்கலாம். உங்களால் வர முடியாத நிலை இருந்தால் நான் உங்கள் வீட்டுக்கே வந்து விசாரணை நடத்துகிறேன். ஆணையத்தில் ஆஜர் ஆவதற்காக வருபவர்களை போலீசார் எதுவும் செய்யமாட்டார்கள். நீங்களும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். மக்கள் அச்சப்படாமல், தைரியமாக தகவல்களை தெரிவிக்கலாம்” என்று கூறினார்.