தமிழக அரசு மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க முடியாதது கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டிள்ளார்.
இன்று (08-06-2018) தமிழக சட்டப்பேரவையில், கழக செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நூலகங்களை அரசின் சார்பில் விரைந்து சீரமைத்து தர வேண்டுமென்று வலியுறுத்தினார். அதேபோல், தமிழக அரசு நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க முடியாததை கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கழக செயல் தலைவர் அவர்கள் சட்டப்பேரவையில் பேசிய விவரம் பின்வருமாறு:
நூலகம் என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக சென்னையில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூலகங்களில் அதிகமான நூலகங்கள் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளன. இதனால், மாணவர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்த முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. இதையெல்லாம் சரி செய்து, நூலகங்களை புதுப்பித்து மக்கள் பயன்பெறக் கூடிய வகையிலான ஒரு சூழலை தமிழக அரசு விரைந்து ஏற்படுத்துமா என கேள்வியெழுப்புகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் படித்த 110 அறிக்கையிலே விவாதம் கூடாது என நீங்கள் உத்தரவு போட்டிருக்கிறீர்கள். இது ஏற்கனவே விதி முறையில் இருக்கக்கூடியது தான், அதை ஏற்றுக்கொள்கிறேன். இடையிலே, அமைச்சர்கள் இங்கு நன்றி சொல்ல போகிறார்கள். இருந்தாலும், எதிர்க்கட்சி என்கிற முறையிலே மேட்டூர் அணையை ஜுன் 12-ம் தேதி திறக்க முடியாத சூழலை இங்கே முதலமைச்சர் தெரிவித்திருக்கக் கூடிய காரணத்தால், அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்ற வகையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.