
கஞ்சா வாங்குவதற்குப் பணம் இல்லாததால் தங்கையை இளைஞரிடம் பேச வைத்து, ஏமாற்றி வரவழைத்து தாக்கி நகை பறித்த சம்பவம் நாகர்கோவிலில் நிகழ்ந்துள்ளது.
நாகர்கோவிலில் விஷ்ணு என்ற இளைஞரை இரவில் தொடர்புகொண்ட நண்பனின் தங்கை, தான் நல்லூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், தன்னைக் காப்பாற்றும்படியும் கூறியுள்ளார். விபத்தில் சிக்கிக் கொண்டதாக நண்பனின் தங்கை கூறுவதைக் கேட்டு அதிர்ந்த விஷ்ணு அவர் சொன்ன இடத்திற்குச் சென்றபோது அவரை 9 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளது. விஷ்ணுவிடம் இருந்த நகை, செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டு சென்றது.

இதுதொடர்பாக சுசீந்திரம் காவல்நிலையத்தில் விஷ்ணு தனது உறவினர்களுடன் சென்று புகாரளித்த நிலையில் விஷ்ணுவுடன் போனில் பேசிய நண்பனின் தங்கையைப் பிடித்து விசாரித்ததில், கஞ்சா வாங்க பணம் இல்லாததால் சகோதரனின் பேச்சைக் கேட்டு இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அந்தப் பெண் உண்மையை ஒப்புக்கொண்டதோடு மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அந்தக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.