“விஜயகாந்த் மேடையில பேசுவாரு.. எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமான்னு.. அதையேதான் நாங்களும் சொல்லுறோம்..” -எடுத்த எடுப்பிலேயே இப்படி பேசினார்கள் விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
‘என்ன நடந்துச்சு?’ அவர்களிடம் கேட்டோம். “சார்.. கல்வித்துறைன்னா சுத்தமா இருக்கணும்ல. ரொம்ப அசுத்தமா இருக்கு. இந்த டிபார்ட்மென்ட்ல ஓ.ஏ., டிரைவர்ல இருந்து அதிகாரிகள் வரைக்கும் யாருக்கும் சம்பளம் குறைச்சலா இல்ல. ஆனா.. பாருங்க.. தீபாவளி போனஸ் கேட்டு, ஒ.ஏ.க்களும் டிரைவர்களும் கையில நோட்டோட ஸ்கூலு ஸ்கூலா ஏறி இறங்கிட்டாங்க. தனியார் பள்ளிகளில் மட்டுமா? இப்பல்லாம் அரசுப் பள்ளிகளிலும் வசூல் வேட்டைதான். கவர்மென்ட் ஸ்கூல் ஒவ்வொண்ணுலயும் ரெண்டாயிரம் போனஸ் வாங்கிட்டாங்க. பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்.. ஸ்வீட் பாக்ஸ்ன்னு இதுவேற. தனியார் ஸ்கூல்ல அதுக்கும் மேல. இதுல கொடுமை என்னன்னா.. சி.இ.ஓ.ஆபீஸுக்கு கொடுக்கணும்.. டி.இ.ஓ. ஆபிசுக்கு கொடுக்கணும்னு சொல்லி கேட்டதுனால.. ஆசிரியர்கள் எல்லாரும் தலைக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கோம். இப்படி வாங்கின லட்சக்கணக்கான பணம் இவங்களுக்கு மட்டும் இல்லியாம். நோட்டுல எழுதியிருக்கிற வசூலில் பெரும்பங்கை அதிகாரிகள் மட்டத்திலும் பிரித்துக் கொடுத்திருவாங்களாம்.” என்று சொல்ல.. ‘பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? ஒ.ஏ., டிரைவருக்கெல்லாம் பெயர் இல்லியா?’ என்று நாம் கேட்க, “சிவகாசி டி.இ.ஓ.டிரைவர் ஜெகத்ரட்சகன்.. ஒ.ஏ. முருகேன்..” என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
நாம் ஒ.ஏ.முருகேசனிடம் பேசினோம். “அதுவந்து சார்.. நாங்க போனோம். ஒரு சில ஸ்கூல்ல கொடுத்தாங்க. ரெண்டு மூணு ஸ்கூல்ல இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதான்.. திரும்பி வந்துட்டோம். இதெல்லாம் தப்பா சார்?” என்று அவர் கேட்டபோது, ’அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு கோடி பேரு அஞ்சுகோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா?’ என்று சினிமாவில் அந்நியன் பேசிய வசனம்தான் நம் நினைவுக்கு வந்தது.
“விருதுநகர் மாவட்டத்தை அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி என நான்கு கல்வி மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். சிவகாசியிலும் அருப்புக்கோட்டையிலும் ஓ.ஏ.க்கள், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் விருதுநகரிலும் டி.இ.ஓ. டிரைவர்கள் நோட்டு போட்டு போனஸ் வசூலித்தனர். விருதுநகர் மாவட்டத்தைப் போலவே தமிழகம் முழுவதும் தீபாவளி வசூல் வேட்டை நடந்திருக்கிறது.” என்று ஆசிரியர்கள் தரப்பிலிருந்து புகார் வாசித்தனர்.
நாம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினியை தொடர்ந்து தொடர்புகொண்டோம். ஏனா அவர் நம் லைனுக்கே வரவில்லை. சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “கல்வித்துறையில் இருந்துகொண்டு தீபாவளி போனஸ் கலெக்ஷன் பண்ணுனது கண்டிக்கத்தக்கது. இதெல்லாம் கூடவே கூடாது. இதுல அதிகாரிகளுக்கு பங்கு என்று சொல்வதெல்லாம் பொய். விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார்.
தீபாவளி முடியும்வரையிலும் காத்திருந்து, கல்வித்துறையினர் வற்புறுத்தி போனஸ் வாங்கிய புகார் வெடியைப் பற்ற வைத்திருக்கின்றனர். ‘இது வெடிக்குமா? வெடிக்காதா?’ என்பது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அத்துறையின் உயர் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது.