நெல்லை மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து அண்மையில் தமிழக அரசு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு பதிய மாவட்டம் அறிவித்தது. ஆனால் அதில் எந்த தொகுதிகள் இணைக்கப்படும் என்பது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே சங்கரன்கோவில் தொகுதி இணைக்கப்படலாம் என்கிற தகவலால் அத்தொகுதியின் விவசாயிகள் இணைக்கக் கூடாது. சங்கரன்கோவில் நெல்லையுடனேயே இருக்க வேண்டும் என்ற தங்களின் எதிர்ப்பை கோரிக்கை மனுவாக மாவட்டக் கலெக்டர் ஷில்பாவிடம் அளித்துள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சந்தானம் தலைமையிலான விவசாயம் எங்களது தாலுகா மற்றும் வட்டாரப்பகுதிகள் வானம் பார்த்த பூமி எங்கள் விவசாயம் மானாவரிக்குளங்களை நம்பியே உள்ளன. இச்சூழலில் எங்களை தென்காசி மாவட்டத்தில் இணைத்தால் வறட்சி நிவாரணம் பெறுவதற்கு வழியில்லாமல் போய்விடும். எனவே நெல்லை மாவட்டத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று தென்காசித் தொகுதிக்குட்பட்ட வி.கே.புதூர் தாலுகா வட்டார விவசாயிகள் அதன் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் அளித்த மனுவில் எங்களின் விவசாய பகுதிகள் வறட்சியானவை. ஆனால் அருகில் உள்ள. தென்காசி வட்டாரங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையால் நல்ல மழைவளம் பெற்றுவருகிறது. எங்களைத் தென்காசி பகுதியோடு இணைத்தால் நாங்கள் வறட்சி நிவாரணம் கேட்க முடியாது. எனவே நெல்லை மாவட்டத்தோடு தொடர வேண்டும் என்று இணைப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.