திருவிடைமருதூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிடைமருதூர் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முந்தாசர் (20). மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு படித்து வருகிறார்.
இவரது தந்தை துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் உள்ள முந்தாசர், இரவு 7 மணி அளவில் திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு டி.வி.எஸ் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
அவரது அக்கா வீட்டிலிருந்து திருவிடைமருதூரில் உள்ள அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக ஃபோன் மூலம் தாய் மும்தாஜ் பேகத்திடம் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் முந்தாசர் ஃபோனிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் முந்தாசரை நாங்கள் கடத்தியுள்ளோம். கோயம்புத்தூர் அழைத்துச்செல்கிறோம், ரூ. 5 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை உயிரோடு விடுவிப்போம் என மிரட்டலோடு கூறியுள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த தாயார் மும்தாஜ் பேகமும் அவரது உறவினர்களும் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர்.
இதுகுறித்து அவனியாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவரும், அவரின் தாய்மாமாவுமான நசீர்முகமது கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் மும்தாசர் ஃபோனிலிருந்து வந்த அழைப்பு, திருபுவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்ஃபோன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். பிறகு அந்த செல்ஃபோனை தொடர்பு கொள்ள முயற்சிக்க ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது.
இதனால் மேலும் உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டது. பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்டது உண்மையா, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார், அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாயமான பொறியியல் கல்லூரி மாணவர் முந்தாசரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் பணம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் முந்தாசர் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் வீரசோழன் ஆற்றுக்கு அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டு இறந்துகிடந்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.