“என் மனைவியைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று ஒரு கணவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் மணி, வயது 29. இவரது மனைவி அபிநயா, இவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதுவரை இவர்களுக்குக் குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார் அபிநயா.
அவர் சென்ற சிறிது நேரம் கழித்து அவரது கணவர் செல்போனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில் அபிநயா, தன்னுடைய குரலில் “என்னை யாரும் தேட வேண்டாம்” என்று மட்டும் பேசியுள்ளார். இதைக் கேட்டுப் பதறிப்போன அவரது கணவர் மணி, தேவனாம்பட்டினம் காவல் நிலையத்திற்குப் பதறி அடித்து ஓடிச்சென்று புகார் அளித்துள்ளார். தனது மனைவியை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள் இன்று போலீஸார், மணியின் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து அபிநயாவை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
அடுத்து இன்னொரு வித்தியாசமான புகாரை மற்றொருவர் கொடுத்துள்ளார். பண்ருட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த புகாரில் என் கணவரைக் காணவில்லை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள் என்று ஒரு மனைவி புகார் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், வயது 60. கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21ஆம் தேதி தனது மனைவி கலாவதியுடன் அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். விடிகாலை 5 மணி அளவில் கலாவதி எழுந்து பார்த்தபோது அவரது கணவரைக் காணவில்லை.
கதறியடித்து எழுந்த கலாவதி, கணவர் மனோகரனை அக்கம் பக்கம் சென்று தேடியுள்ளார். பிறகு உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கலாவதியின் கணவர் மனோகர் தன் மனைவிக்கு திடீரென்று போன் செய்துள்ளார். அப்போது கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே மனம் போன போக்கில் எங்கோ போய்க் கொண்டிருக்கிறேன். என்னைத் தேட வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டுவிட்டார்.
கணவரின் பேச்சைக் கேட்டு மனம் கலங்கிய கலாவதி போலீசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார். எப்படியாவது என் கணவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கதறி அழுதபடி சென்ற அவரது புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேற்படி இரு புகார்களும் தனித்தனி சம்பவத்தின் அடிப்படையில் புகார்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.