தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18லிருந்து 23 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிதாக சேலத்தில் ஐந்து பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் அவர்களின் சுற்றுலா வழிகாட்டிக்கு கரோனா உறுதியானது. கரோனா உறுதியான 5 பேருக்கும் சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா அறிகுறியால் சிகிச்சை தரப்படும் 110 பேரின் மாதிரி முடிவுகள் ஆய்வில் உள்ளன. 2,09,276 பேரை பரிசோதித்ததில் 890 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன." இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 23 பேரில் ஏற்கனவே ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மதுரையில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.