கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் நந்தினி. இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்றுவருகிறார். இவர், நேற்று முன்தினம் (21.12.2021) மாலை தியாகதுருகம் கடை வீதியிலுள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையத்தில் தனது தாயின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில் அவருக்கு அருகில் நின்றிருந்த மர்ம வாலிபர், “பணம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்த ரெசிப்ட் உங்களுக்கு வரவில்லை. மீண்டும் ஒருமுறை கார்டை செலுத்திப் பாருங்கள்” என்று கூறியுள்ளார். அப்போது அம்மாணவியின் கையிலிருந்த ஏ.டி.எம். கார்டு தவறி கீழே விழுந்துள்ளது. அந்தக் கார்டை எடுத்து அம்மாணவியிடம் கொடுப்பதுபோல, அந்த மர்ம நபர் வேறு ஒரு கார்டை அம்மாணவியின் கையில் கொடுத்துவிட்டு, கீழே விழுந்த கார்டை அவர் எடுத்துக்கொண்டார்.
இதைக் கவனிக்காத அம்மாணவி, அந்த மர்ம நபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டை மெஷினில் போட்டு பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றிருக்கிறார். வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் அவரது தாய் வங்கிக் கணக்கில் இருந்து 29 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக செல்ஃபோனுக்குக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அம்மாணவி, மீண்டும் ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று பார்த்தபோது, அந்த மர்ம நபர் அங்கு இல்லை. அப்போதுதான் தன்னிடம் மர்ம நபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டு போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாணவி புதுரகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து 29 ஆயிரம் பணம் மோசடி செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக தேடிவருகின்றனர்.