நாமக்கல் அருகே, திருமணத்தை மீறிய உறவில் இருந்த லாரி ஓட்டுநரை கல்லால் அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவனை சேந்தமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் (45). இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். சுரேஷின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மகள், பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், லாரிக்குச் செல்லும்போது எருமப்பட்டி அருகே வசிக்கும் முத்தையன் மனைவி கஸ்தூரி என்பவருடன் சுரேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானதை அடுத்து, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சில நேரங்களில் கஸ்தூரி வீட்டிலேயே இரவு தங்கவும் ஆரம்பித்தார். கஸ்தூரிக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது தாயுடன், லாரி ஓட்டுநர் சுரேஷ் உறவு வைத்திருப்பது கஸ்தூரியின் மகனுக்கு பிடிக்கவில்லை. அக்கம்பக்கத்தினரும் அவரை கேலி செய்து வந்ததால், சுரேஷுடனான தொடர்பை விட்டுவிடுமாறு கஸ்தூரியிடம் அவரது மகன் பலமுறை கூறியுள்ளார். சுரேஷும் அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், மார்ச் 29 ஆம் தேதி இரவு, சுரேஷ் குடி போதையில் கஸ்தூரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கஸ்தூரியின் மகன், எங்கள் வீட்டுக்கு இனி நீ வரக்கூடாது எனக்கூறி அவரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த கஸ்தூரியின் மகன், கீழே கிடந்த கல்லை எடுத்து சுரேஷை தாக்கியுள்ளார். இதில், தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே சுரேஷ் இறந்தார். இதைப் பார்த்து பதறிப் போன கஸ்தூரியின் மகன், ஒரு மினிடோர் ஆட்டோக்காரரை வாடகைக்கு அழைத்து வந்துள்ளார். அவரிடம், சுரேஷ் எனக்குத் தெரிந்தவர்தான். அவர் குடிபோதையில் கீழே விழுந்துவிட்டார். அவரையும், அவருடைய மோட்டார் சைக்கிளையும் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷின் சடலத்தையும், மோட்டார் சைக்கிளையும் மினிடோர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் ராமநாதபுரம் புதூருக்குச் சென்றுள்ளார். அவருடைய வீட்டின் முன்பு சுரேஷின் சடலத்தையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சுரேஷை கொலை செய்தது கஸ்தூரியின் மகன்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.