விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று பள்ளி கல்லூரிகள் திறந்ததையடுத்து அங்குச் சென்று ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கையில் செருப்பு அணிந்து சென்ற ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்தார் ஆட்சியர். உடனே காரை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி அந்த மாற்றுத்திறனாளி இடம் விசாரித்தார்.
அந்த மாற்றுத்திறனாளி நெர்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன்(46) பிறந்து எட்டு மாதத்தில் தமக்கு இளம்பிள்ளை வாத நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டதாகவும் தற்போது கைகள் மூலம் தையல் வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அரசு எனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியது. அது பழுதடைந்து உடைந்து சேதம் ஆகிவிட்டது. அதன் பிறகு ஒரு புதிய சைக்கிள் வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அலைந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அதே போல் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
உடனே மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல அலுவலரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளை கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன்படி வரவழைக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிளை மாற்றுத்திறனாளி முனியப்பனிடம் வழங்கினார் ஆட்சியர் மோகன். தமது 10 ஆண்டுக்கால கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி முனியப்ப கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் சிறப்பான நடவடிக்கையைக் கண்டு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.