
ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தமிழக அரசின் முத்திரையே ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்தான். இந்நிலையில், இன்று இக்கோவிலில் சமபந்தி நடந்தது. விருதுநகர் ஆட்சியர் சிவஞானம், காவல் கண்காணிப்பாளர் ராசராசன் போன்ற மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கோவிலுக்குள் நடந்த இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் செருப்பைக் கழற்றாமலே, சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டார். அதனால், திருக்கோவிலை ஆட்சியர் களங்கப்படுத்திவிட்டதாகவும், கோவிலைச் சுத்தப்படுத்தி பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் ஆண்டாள் பக்தர்கள் குமுறலாகச் சொல்கின்றனர்.

என்ன பரிகாரமாம்?
பழைய சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு நடிகர் பவன்கல்யாண், ஆந்திரா – விசாகப்பட்டினம் – சிம்மாசனம் நகரிலுள்ள ஸ்ரீ வராகர் லட்சுமி நரசிம்மா கோவிலுக்கு வந்தார். அப்போது, அவருடைய ரசிகர்கள் கட்டுப்பாடின்றி காலில் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்தனர். அந்தக் களங்கத்தைக் போக்குவதற்காக, கோவிலைச் சுத்தம் செய்து சம்ரோஜனா பூஜை நடத்தினார்கள். அதுபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இக்கோவிலுக்கு வந்த சசிகலாவுக்காக ஆகம விதிகள் மீறப்பட்டன. ‘இது சசிகலாவுக்கு நல்லதல்ல’ என்று அப்போதும் பக்தர்கள் எச்சரித்தனர். தற்போது, ஆட்சியரின் நடவடிக்கையை ஆட்சியோடு சம்பந்தப்படுத்தி, அதே பாணியில் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தரப்பிலோ, “சமபந்தி நடந்தது கோவிலுக்குள் அல்ல. கோவில் மண்டபத்தில்தான். வழிபடுவதற்காக அவர் செல்லவில்லை. அங்கு நடந்த (சமபந்தி) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதைக் களங்கப்படுத்திவிட்டதாகக் குறை கூறுவது ஏற்புடையதல்ல.” என்கிறார்கள் வருத்தத்துடன்.