தமிழகம் முழுவதும் திங்கள் கிழமைகளில் ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது புகாரை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தொடங்கும் முன் காலை 9:30 மணி போல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவலர்களின் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் முந்தைய முறை நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் அளித்த புகாரின் தற்போதைய நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி ஆய்வு நடத்தப்படும். அதன் பின் மக்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
இந்த நிலையில், நேற்றைய நாளான (16-10-23) வாராந்திர குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கீதா 9:30 மணிக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் கூட்டரங்கிற்கு வந்திருந்தார். அதற்குள் சில அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். ஆனால், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பல அதிகாரிகள் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக வராததால், ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அறையின் கதவுகளை மூட உத்தரவிட்டு அந்த அறையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். மேலும், தாமதமாக வரும் அதிகாரிகள் யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
அதனால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் தாமதமாக வந்த அதிகாரிகள் உள்ளே வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த வார கூட்டத்தின் போது பல அதிகாரிகள் தாமதமாக வந்திருந்தனர். அதனால், குறைதீர்க்கும் கூட்டம் காலை தாமதமாகத் தான் தொடங்கியிருந்தது. அதனால், அதிகாரிகள் அனைவரும் காலை 9:30 மணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.