திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கும், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரியதாகி அரசு ஊழியர் சங்கம் இதில் தலையிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 2ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறை, அங்கன்வாடி சங்கங்களை சேர்ந்தவர்கள் துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் ஆட்சியர் கந்தசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஊழியர் விரோத போக்கில் உள்ளார். ஆய்வு கூட்டங்களில் கடுஞ்சொற்களால் ஊழியர்களை வசைப்பாடுகிறார், பெண் ஊழியர்களிடம் டிவி சீரியல் பார்க்கிறியா என கேலி செய்கிறார், சத்துணவு அங்கன்வாடி மையப்பணியாளர்களை நீங்கள் சமூக சீர்கேடுகள் என விமர்சிக்கிறார், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டங்களில் அரசு ஊழியர்களை அவமானப்படுத்தும் விதமாக வேண்டுமென்றே பேசுவது, இதுதான் நீ வாங்கும் கடைசி சம்பளம் என கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு பலமுறை சென்ற சங்க நிர்வாகிகளை அழைத்து பேசமறுத்து அவமானப்படுத்துவது, சத்துணவு ஊழியர்களின் பதவி உயர்வு போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்த அந்த ஆர்ப்பாட்டத்துக்கு திடீரென வந்த ஆட்சியர் கந்தசாமி, போராட்டத்தில் கலந்துக்கொண்ட சங்கத்தினரிடம் தன்னை பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்து விளக்கம் சொன்னார்.
இதனை கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி, சங்க நிர்வாகிகளை அறைக்கு அழைத்து தனியாக பேச வேண்டும் என்றனர். ஆட்சியரோ, எல்லோர் முன்பும் பேசுவோம் என்றார்கள். இதற்கு நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் பேசக்கூடாது என நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க அங்கிருந்து அகன்ற கந்தசாமி, செய்தியாளர்களிடம், சங்க நிர்வாகிகள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ளாமல், அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்ககூடாதென ஊழியர்களை தூண்டி விடுகிறார்கள் என்றார்.
இந்த பிரச்சனை அரசின் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆட்சியர் தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை. இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதிகளவில் ஊழியர்கள் வருவார்கள் என நூற்றுக்கும் அதிகமான போலிஸார் நுழைவாயில் முன்பு குவிக்கப்பட்டனர். போராட்டத்துக்கு வந்ததோ 250 ஊழியர்கள் தான்.
மதியம் 12.30 வரை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன்பின், எங்களை அழைத்து பேச வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஆட்சியரை கண்டித்து பேசினர். அதன்பின் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயல, போலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயல அரசு ஊழியர்களுக்கும் – போலிஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின் போலிஸார் எச்சரிக்கை செய்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன.