வடமாநிலங்களிலிருந்து சென்னை, கேரளா, தென் தமிழகம், கர்நாடகாவுக்கு செல்லும் ரயில்கள் ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாகவே வந்து செல்லும். மிக முக்கியமான ரயில் பாதையிது. இந்த வழியாக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வருகின்றனர். பல நேரங்களில் கஞ்சா, சாராய கடத்தல்காரர்கள் பொருட்களோடு சிக்கியுள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்திலிருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூருக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அரக்கோணம் ரயில் நிலையம் புதிய நடை மேம்பாலம் அருகில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 டிராவல் பேக்குகளுடன் இரண்டு வாலிபர்கள் அங்கு நின்றிருந்தனர். அவர்களை நெருங்கிய போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்வது தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த ட்ராவல் பேக்கை பரிசோதிக்க முடிவு செய்து அதனைத் திறந்து பார்த்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. அவர்கள் விசாரித்ததில் கோயம்புத்தூர் செம்மேடு அடுத்த முள்ளங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (21), கோயம்புத்தூர் சிறுவாணியைச் சேர்ந்த ரங்கசாமி (23) என்பது தெரிந்தது.
இவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு கஞ்சாவை ரயில் மூலம் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரிந்தது . இவர்களிடம் 21 பண்டல்களில் இருந்த 37 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் யாரிடமிருந்து கஞ்சா வாங்கினார்கள் என விசாரணை நடத்திய போலீஸார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.