கோவை மாவட்டம், வீரகேரளம், ராஜயோகம் நகரில், சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய ஒருவரிடமிருந்து போலீசார் கத்தியைப் பறிமுதல் செய்துனர். அந்த சி.சி.டி.வி., வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், ராஜயோகம் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில், தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றிவருவதாக, போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, பட்டாக்கத்தியுடன் சுற்றிய மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். சி.சி.டி.வி., கேமராவில் பதிவான பைக்கின் எண் கொண்டு, போலீசார் விசாரணை நடத்தியதில், பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர்கள், உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (26), நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த நிர்மல் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்த இரண்டு பட்டா கத்திகளைப் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த வடவள்ளி போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.