Skip to main content

“மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Taking away the rights of states is like stopping oxygen CM MK Stalin

கேரள அரசு கடன் வாங்குவதில் உச்சவரம்பு விதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக உரையாற்றினார். அதில், “இந்த போராட்டத்தில் பங்கெடுக்க சகாவு பினராயி விஜயன் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, நேற்றுதான் தாயகம் திரும்பினேன். அதன் காரணமாக, என்னால் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எங்களுடைய கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பிக்களை அனுப்பினேன்.

கேரளத்துல இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுறேன். நேற்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தி இருக்கிறார். இன்று திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப்பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. 

Taking away the rights of states is like stopping oxygen CM MK Stalin

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞரிடம் ஒரு கருத்தை சொன்னார். ‘தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றித் தருவேன்’ என்று சொன்னார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார்.

Taking away the rights of states is like stopping oxygen CM MK Stalin

மாநிலங்கள் இருப்பதோ, மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ மோடிக்கு பிடிக்கவில்லை. இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான். நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையைப் பறித்தார்; மொழி உரிமையை பறித்தார்; சட்ட உரிமையை பறித்தார். மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பா.ஜ.க முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் காம்ரேட் பினராயி விஜயனும் போராடி வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம்.

அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய மத்திய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்களுடைய பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான். மாநில அரசிடம் தான் எல்லா அன்றாடத் தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும். 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசைக் கைப்பற்றி, பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.