![coimbatore](http://image.nakkheeran.in/cdn/farfuture/ya6MCCP7zv9OZMpSHTIws-8F-4NOGXAGLAuN56EyY50/1598841155/sites/default/files/inline-images/640_4.jpg)
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் ஹரிஹரசுதன் ஆன்லைன் மூலம் ஜவுளி வர்த்தகம் செய்து வந்துள்ளார். இவரை, தொடர்பு கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜவுளி வர்த்தகம் குறித்து விசாரித்திருக்கிறார்.
அவருக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கி தருவதாக, ஹரிஹரசுதன் உறுதியளித்திருக்கிறார். இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்று இருக்கிறார் ஹரிஹரசுதன்.
பணத்தை பெற்று கொண்ட ஹரிஹரசுதன், நீண்ட நாட்கள் ஆகியும் ஜவுளிப் பொருட்களை அனுப்பாமல் இருத்ததாகவும், இதுகுறித்து அந்த நபர் கேட்டபோது, கரோனா தொற்று காரணமாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் பொருட்களை, தற்போது வழங்க முடியாது எனவும் தொடர் தாமதத்தால், பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு ஹரிஹரசுதன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த நபர் அளித்த புகாரின் பேரில், கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று கோவை வந்த கர்நாடகா போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து, காசோலை மோசடி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை கர்நாடகா அழைத்து சென்றனர்.