கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்ககத்துறை சார்பில் கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கார்மாங்குடி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடும் நுட்பங்கள் குறித்து மூன்றாவது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மண்புழு எரு, பூச்சிவிரட்டி, இயற்கை களைக்கொல்லி, மீன் அமினோ கரைசல், வேப்பங்கொட்டை சாறு மற்றும் இஞ்சி பூண்டு கரைசல் தயாரித்தல், போன்றவை குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கோவை வேளாண் பல்கலைக்கழக அங்ககத்துறை தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம், பேராசிரியர் ஜான்சிராணி, பேராசிரியர் கணேசன், பேராசிரியர் சுனிதா மற்றும் உழவர் மன்ற தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்கண்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தார்கள். இறுதியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண்புழு எரு தயாரிக்கக்கூடிய இடு பொருட்களான மண்புழு, பாலிதீன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டது.
இறுதியாக வருகிற டிசம்பர் 3 மற்றும் 4- ஆம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலை கழகத்தை நேரில் பார்வையிட அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. பயிற்சி நிறைவாக உழவர் மன்ற உறுப்பினரும், முன்னோடி விவசாயியான முத்து.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். பிறகு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளின் நெற்பயிர்களை பேராசிரியர் குழுக்கள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.