தமிழகத்திலும் கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால், மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட், தற்காலிகமாக திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் நான்கு மாதங்களுக்கு மேலாக மூடியிருப்பதால் மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று கோயம்பேட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனால் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காய்கறி மொத்த விற்பனை அங்காடி கோயம்பேட்டில் வருகிற செப்டம்பர் 28 -ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளும் வெளியிட்டிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தைக்கு கனரக சரக்கு வாகனங்கள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். சரக்குகளை வாங்கியபின் கனரக வாகனங்கள் இரவு 12 மணிக்கு வெளியே சென்றுவிட வேண்டும். கோயம்பேடு வளாகத்தில் ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தனிநபர்கள் பொருட்களை வாங்க தடை விதிக்கப்படுகிறது. அங்காடியில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படும்.
கீரைகள், வாழை இலைகள் விற்பனை ஒன்பதாம் நுழைவு வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்காடியில் சாலையோர விற்பனைகள் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். முகக் கவசம், தனிநபர் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.