Skip to main content

‘சுரங்கம் தோண்டும் பணி நிறைவு’ - மெட்ரோ ரயில் நிறுவனம் பெருமிதம்!

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
cmrl says Completion of tunneling work for chennai Metro Rail 

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2, வழித்தடம் 3இல் பாலாறு எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.​வழித்தடம் 3இல், சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023 இல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி ஆகஸ்ட் 2024இல் (downline) ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது. இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் (upline) சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று  (09.10.2024) ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்பட் மாநகராட்சி பள்ளி, சேத்பட் தோபி காட், கருகாத்தம்மன் கோயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.

cmrl says Completion of tunneling work for chennai Metro Rail 

இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர். இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாகச் சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாட்கள் ஆனது. இது சென்னை மெட்ரோ ரயிலின் கட்டம் 2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கச் சாதனையைக் குறிக்கிறது.

இந்நிகழ்வை, சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், லார்சன் - டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கோனேரு பவானி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்