மத்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிராக உள்ளது எனக்கூறி இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 -ஆவது நாளாக திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில், 100 -க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் பொம்மையை எரிக்க முற்பட்டனர். அப்பொழுது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.