கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லால்புரம் ஊராட்சியில் காந்தியடிகளின் பிறந்த நாளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஊராட்சியில் செய்த பணிகள் விளக்கி கூறப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஷபானா அஞ்ஜூம், லால்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “லால்புரம் ஊராட்சியில் 1958 வீடுகளில் 1946 வீட்டில் கழிவறை கட்டப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டக்கூடியது. இந்த ஊராட்சியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராட்சியாக மாற்ற வேண்டும். மேலும் நெகிழி இல்லா கிராமமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கிராமங்களை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் உயரிய சிந்தனையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்” என பேசினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி உரையில், “கிராமப்புறம் மூலமாகத்தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது. எல்லாரும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. மக்களாட்சியின் மகத்தான அமைப்பான கிராம சபை கூட்டம் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்ற காலமாக அமைந்திட வேண்டும்” எனத் தெரிவித்தார்.