'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக இன்று நண்பகல் 12.00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று உதவிப்பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்திருந்தார்.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள மக்கள், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அறிவுத்தியுள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வருடன் அமைச்சர்கள், பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.