சேலம் மாவட்டம், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 123 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூபாய் 118.93 கோடி மதிப்புள்ள 44 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வனவாசி அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசின் நடவடிக்கையால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உள்ளனர். நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. கரோனா காலகட்டத்திலும் கூட தமிழகத்தில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை, முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்பட்டன. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தன. கரோனாவிற்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. விமர்சனங்களை தவிடுபொடியாக்கி தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம். கரோனா தொற்று மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது.
ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும். தமிழகம் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் ரூமில் உட்கார்ந்து கொண்டு ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம். ஒருநாள் கூட எனது அரசு தாங்காது என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார். மூன்றரை வருடங்களைக் கடந்து எனது ஆட்சி வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும்; அரசியலோடு செயல்படக்கூடாது" இவ்வாறு முதல்வர் பேசினார்.