Skip to main content

“கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 12/08/2024 | Edited on 12/08/2024
 CM MK Stalin tweet Education is an asset that no one can take away

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) வாயிலாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 29 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 18 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 97 நபர்களும் என மொத்தம் 144 நபர்கள் தேர்வுகள் செய்யப்பட்டன. இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.08.2024) 5 நபர்களுக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

 CM MK Stalin tweet Education is an asset that no one can take away

இவர்களில் துர்கா என்பவருக்கு நகராட்சி ஆணையராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமாகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 CM MK Stalin tweet Education is an asset that no one can take away

முன்னதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு துர்கா அளித்த பேட்டியில், “இன்று முதல் நகராட்சி ஆணையராக பணியாற்ற உள்ளேன். இதற்கான பணி ஆணையை முதல்வரிடம் இருந்து பெற உள்ளேன். இது எனக்குச் சந்தோஷமாக உள்ளது தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து சலுகைகளைப் பயன்படுத்தி படித்தாலே கண்டிப்பாக நல்ல நிலைக்கு வரலாம். நான் அது போன்று தான் அரசுப் பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் படித்து டி.என்.பி.எஸ்.சி.-க்கு தயாராகும்போது அரசின் டிஎன்பிஎஸ்சி பயிற்சி போர்டல், அரசு இலவச பயிற்சி மையம் என எல்லாத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டேன்.

என்னுடைய அப்பா மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்தார்கள். அப்பா பட்ட கஷ்டங்களையும் நான் பார்த்தேன். அவர் வேட்டி சட்டை கூட அணிந்தது கிடையாது. இதை எல்லாம் ஒரு பெண்ணாக நான் நன்றாக இருக்க வேண்டும் என்று என்று தான் பட்ட கஷ்டத்தை மகள் படக்கூடாது என்பதில் மட்டும் தான் அப்பா உறுதியாக இருந்தார். இதற்காக அப்பா நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டது கிடையாது. அவர் இருக்கும்போதே இந்த பணியை வாங்கியிருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

 CM MK Stalin tweet Education is an asset that no one can take away

கடந்த கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக என்னை விட்டுத் தவறிவிட்டார். என்னுடைய அப்பா, தாத்தா ஆகியோர் தூய்மை பணியாளர்கள். நான் இன்று நகராட்சி ஆணையராகப் பணி அணை பெறுவதன் மூலம் இன்றையிலிருந்து என்னுடைய தலைமுறை மாற்றத்தைக் காணும். இந்த வாய்ப்பு இந்த வாய்ப்பு கொடுத்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த காணொளியைக் குறிப்பிட்டு இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் துர்காவே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன்… கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்